பயன்பாட்டுப் பொருட்களை வாங்குகையில் சக்திக் காரணிகள் பற்றிச் சிந்திக்கவும். பழம்பொருளாக வீட்டில் இருக்கும் குளிர்சாதனத்தினை அகற்றுவது அல்லது இரைச்சலுடன் சுற்றும் மின் விசிறியினை அகற்றுவது மனதிற்குக் கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால் அதனைச் செய்யத்தான் வேண்டும். நீண்ட காலத்தில் வினைத்திறன் மிக்க பயன்பாட்டுப் பொருட்கள் உங்களின் சேமிப்பிற்குப் பங்களிப்பு வழங்கும். அதிக சக்தியினைச் சேமிப்பதற்குக் கீழே ஒரு பரிசீலனைப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
விளம்பரக் கவர்ச்சியினாலா நான் இதனை வாங்குகின்றேன் அல்லது எனது அயலவர்கள் வாங்குவதால் வாங்குகின்றேனா அல்லது உண்மையிலேயே எனக்கு இது தேவைதானா?
உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படுவதை விடப் பெரிய அளவான பொருட்களையோ அல்லது அதிக சக்திமிக்க பொருட்களையோ வாங்கவேண்டாம்.
விளக்குகள், கூரை மின் விசிறிகள், குளிர் சாதனங்கள், குளிரூட்டிகள் மற்றும் கணினிகள் போன்ற பொதுவான வீட்டுப் பாவைனைப் பொருட்கள் சக்தி லேபல்களைக் கொண்டுள்ளன. ஒரு வினைத்திறன்மிக்க பொருளினை நீங்கள் வாங்குகின்றீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். ஏனெனில் அப்பொருள் ஆரம்பத்தில் அதிக விலையுடையதாக இருந்தாலும் நீண்ட காலத்தில் அது அதிக பணத்தினைச் சேமித்துத் தரும். சக்தியினைச் சேமிக்கின்ற அம்சங்கள் மற்றும் வடிவமைப்புக்களை நாடவும். பயன்பாட்டுப் பொருட்களின் விலைகளையும் செயலாற்றுகையினையும் நீங்கள் கவனமாகப் பரிசீலிப்பது போன்றே அவற்றின் சக்தி தொடர்பான அம்சங்களையும் பரிசீலிக்கவும். என்னென்ன அம்சங்கள் சக்திப் பாவனையினை அதிகரிக்கின்றன மேலும் அந்த அம்சங்கள் உங்களுக்குத் தேவையா என்பதைப் பற்றியும் அப்பொருள் உங்களுக்கு உண்மையிலேயே தேவையா என்பதைப் பற்றியும் சிந்தியுங்கள். உதாரணமாக ஆடை உலர்த்தி ஒன்று 3000 வற் சக்தியினை நுகரலாம். அதேவேளை துணி துவைக்கும் இயந்திரத்திற்கு அச்சக்தியில் ஐந்தில் ஒன்றே தேவைப்படுகின்றது. சில பொருட்கள் வெப்ப ஒழுங்காக்கி (தேர்மோஸ்டட்) போன்ற விசேட சக்திச் சேமிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.
அளவுக்கதிகமான பொருட்கள் சந்தையில் குவிவதால் செலவுச் சிக்கனம் பற்றிய ஒப்பீட்டினை மேற்கொள்வது இன்றியமையாததாகும். கொள்வனவுக் கருதுகோள்கள், நேரம், சௌகரியம், பணம் மற்றும் சக்தியினைச் சேமித்துப் பாதுகாத்தல் போன்ற காரணிகளைச் சமனிலைப்படுத்த வேண்டும். அம்சங்கள் ஒரே மாதிரியானவைாயக இருந்தபோதிலும் பயன்பாட்டுப் பொருட்களின் சக்தி நுகர்வில் கணிசமான வித்தியாசங்கள் காணப்படுகின்றன.