தற்போது மின்சக்திப் பிறப்பாக்கத் துறை திரவப் பெற்றோலிய எரிபொருளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. 2017 ஆம் ஆண்டின் போது உள்ளவாறாக இலங்கை அதன் ஏற்றுமதி வருவாயின் 29.5 சதவிகிதத்தினை எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவழித்துள்ளது. எனவே நாட்டின் நிதி வளங்கள் உயர் இறக்குமதிச் செலவினால் நாட்டை விட்டு அதிகளவில் வெளியேறுகின்றன. இதனால் இறக்குமதி செய்யப்பட்ட சக்தி வளங்களில் இருந்து விலகி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களில் அதிக கவனத்தினைக் குவிப்பது அவசரத் தேவையாகக் கருதப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் சக்தியில் இந்த நாடு தொடர்ந்தும் தங்கியிருந்தால் கஸ்டப்பட்டு உழைத்த வெளிநாட்டு நாணயச் செலாவணிகள் நாட்டை விட்டு தொடர்ந்தும் வெளியேறும். அதேவேளை புதிய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை உருவாக்குவதில் நாடு கவனம் குவிக்குமாக இருந்தால் இவ்வாறான செல்வங்கள் நாட்டினுள்ளேயே தங்கிவிடும்.

புதிய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை உருவாக்குவது வேறு பல நேரடியான பொருளாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. சகல புதிய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வகைகளும் வேலைவாய்ப்பினை உருவாக்குவதில் நேரடியாகப் பங்களிப்பு வழங்குகின்றன. எவ்வகையான புதிய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மின்னுற்பத்தி நிலைய நிர்மாணிப்பும் பொறியாளர்களுக்கும் தொழில்நுட்பவியலாளர்களுக்கும் திறன்மிக்க தொழிலாளர்களுக்கும் ஓரளவு திறன் படைத்த தொழிலாளர்களுக்கும் தொழில் வாய்ப்பினைக் கொண்டுள்ளது. மேலும் சமுதாயங்களின் சமூக பொருளாதாரச் சூழமைவும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள உட்கட்டமைப்பும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தரமுயர்த்தப்படுகின்றன. ஏனெனில் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பது செப்பனிட்ட வீதிகளையும் மதகுகளையும் ஏனைய உட்கட்டமைப்புக்களையும் கிராமங்களுக்குப் பெற்றுக்கொடுக்கி்ன்ற அதேவேளை மின்சாரத்தினை விநியோகிப்பது சமுதாயங்களின் வாழ்க்கைத் தரத்தினையும் உயர்த்துகின்றது.

இன்று சிறிய நீர் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பது மாத்திரமே இலங்கையில் பாரிய சிகரங்களைத் தொட்டுள்ளது. இந்த வெற்றியினை உலகின் ஏனைய பாகங்களுக்குக் கொண்டு செல்வதற்கும் இது வழிவகுக்கின்றது. மதியுரைச் சேவை, கருத்திட்ட உருவாக்கம் மற்றும் அமுல்படுத்தல் ஆகியவற்றில் ஆபிரிக்கக் கண்டத்தில் நீர் மின் உற்பத்தி வியாபாரம் முன்னணி வகிக்கின்றது. உலகின் எப்பாகத்திலும் சிறிய நீர் மின் உற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்குத் தேவையான திறன் கொண்ட பாரிய மனித வளத் தளத்தினை நாடு உருவாக்கியுள்ளது.

நாடு அதற்கே உரித்தான உயர் தரத்திலான நீரியல் டேர்பைன் உற்பத்திச் ஆலைகளைக் கொண்டுள்ளது. இதில் ஐரோப்பிய உற்பத்தியாளர்களினால் மாத்திரமே இதுவரையில் எட்டப்பட்ட சக்தியினைச் சேமித்துப் பாதுகாக்கும் வினைத்திறன் மட்டமும் காணப்படுகின்றது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டேர்பைன்கள் உள்நாட்டு மின் உற்பத்தி நிலையங்களில் மாத்திரம் பாவிக்கப்படாமல் ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் காற்று டேர்பைன்களை உருவாக்குவதற்கான முன்னெடுப்புக்களும் காணப்படுகின்றன. அதேவேளை இரண்டு தொழிற்சாலைகளில் காற்றாலைக்கான அலகுகள் (பிளேடுகள்) உற்பத்தி செய்யப்படுகின்றன.

புதிய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி உருவாக்கம் சுற்றாடலுக்குப் பாரிய சாதகமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இது கரியமில வாயு மற்றும் ஏனைய பச்சை வீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தினை ஈடுசெய்வதற்கு நேரடியாகப் பங்களிப்பு வழங்கி அதன் மூலம் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினைத் தணிப்பதற்கும் நேரடியாகப் பங்களிப்பு வழங்குகின்றது.

call to action icon