சூரியனில் இருந்து சக்தியினை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் மழை முகில் சூழ்ந்துள்ள நேரத்தில் சிறிதளவு சக்தியினையே பெற முடியும். சூரிய சக்தி உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் மின்சாரப் பிறப்பாக்கத்திற்கு அல்லது வெப்பமேற்றுவதற்கு மற்றும் கடல்நீரினை நன்னீராக மாற்றுவதற்கு சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்த அளவில் பிரபலமாகி வருகின்றது.
சூரிய சக்தி இரண்டு பிரதான வழிகளில் பிறப்பிக்கப்படுகின்றது:
போடோவொல்டய்க்ஸ் என அழைக்கப்படும் சூரியக் கலங்கள் சூரிய ஒளியினை நேரடியாக மின்சாரமாக மாற்றும் இலத்திரனியல் சாதனங்களாகும். நவீன சூரியக் கலங்கள், இன்று அதிகமான மக்களினால் அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றவாறு, வீடுகளிலும் கணிப்பான்களிலும் பொருத்தப்பட்டுள்ள பெனல்களில் காணப்படுகின்றன. சூரியக் கலங்கள் தற்போது துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் தொழில்நுட்பங்களில் ஒன்றாக அமைந்துள்ளதுடன் எதிர்கால உலகளாவிய மின்சாரப் பிறப்பாக்கக் கலவையில் பாரிய வகிபாத்திரத்தினை வகிக்க இது தயாராக உள்ளது.
வர்த்தக அடிப்படையில் மின்சாரத்தினை வழங்குவதற்கு அல்லது சிறிய வலையமைப்புக்களுடன் மின்சாரத்தினை இணைப்பதற்கு அல்லது தனிப்பட்ட பாவனைக்காக மின்சாரத்தினைப் பெறுவதற்கு சூரியக் கலங்களை இணைக்க முடியும். மின்சார விநியோக வலயத்திற்கு வெளியே வாழும் மக்களுக்கு மின்சாரத்தினை வழங்குவதற்கு சூரியக் கலங்களைப் பயன்படுத்துவது மிகச் சிறந்த முறையாகும்.
சூரியக் கலங்கள் பொருத்தப்பட்ட பெனல்களை உற்பத்தி செய்யும் செலவு கடந்த தசாப்தங்களில் அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இக்காரணத்தினால் பயன்படுத்துவதற்கு ஈடுகொடுக்கக்கூடிய மின்சார வடிவமாக இது மாறியுள்ளது. சூரியக் கலப் பெனல்கள் சுமார் 25 வருட ஆயுட்காலத்தினைக் கொண்டுள்ளதுடன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிப்படையில் இவை வெவ்வேறு வர்ணங்களில் வருகின்றன.
செறிவாக்கப்பட்ட சூரிய சக்தி (CSP) சூரியக் கதிர்களைச் செறிவாக்குவதற்கு கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றது. இக்கதிர்கள் திரவத்தினைச் சூடாக்குகின்றன. இச்சூடாக்கப்பட்ட திரவம் வெப்பப் பரிமாற்றியினூடு ஓடி நீராவியினை உருவாக்குகின்றது. நீராவி மின்சாரத்தினைப் பிறப்பிக்க டேர்பைனைச் சுழற்றுகின்றது. செறிவாக்கப்பட்ட சூரிய சக்தி பாரிய அளவில் இயங்கும் மின் ஆலைகளில் மின்சாரத்தினைப் பிறப்பிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
செறிவாக்கப்பட்ட சூரிய சக்தி ஆலை பொதுவாகத் தளவாடிகளின் தொகுதியினைக் கொண்டுள்ளது. இவை சூரியக் கதிர்களை உயரமான மற்றும் ஒடுக்கமான கோபுரத்திற்கு அனுப்புகின்றன. சூரியக் கலங்களைக் கொண்ட பெனல்களைக் கொண்ட மின்சக்தி ஆலைகளை விட இவ்வாறான ஆலைகளின் பிரதானமான நன்மைகளில் ஒன்று இவற்றில் உருகிய உப்புக் காணப்படுவதாகும். உருகிய உப்பு வெப்பத்தினைக் களஞ்சியப்படுத்தி வைக்கின்றது. இதனால் சூரியன் மறைந்து சில மணி நேரங்களின் பின்னரும் மின்சாரம் பிறப்பிப்பது இயலுமாக்கப்படுகின்றது.
இலங்கையின் சகல புவியியல் பிரதேசங்களிலும் கணிசமான அளவு சூரியக் கதிர்வீச்சுக் கிடைக்கின்றது. உலகளாவிய கிடையான கதிர்வீச்சேற்றம் (GHI) 1247 kWh/m2 இற்கும் 2106 kWh/m2 இற்கும் இடையில் மாறுபடுகின்றது. மலைப்பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் தாழ்நிலப் பிரதேசங்களில் கிடைக்கும் சூரியக் கதிர்வீச்சேற்றத்தின் தீவிரம் உயர்வானது என்பது கவனத்திற்கொள்ளப்படுவதற்கான ஒரு விடயமாகும். இதற்கான காரணம் மலைப்பிரதேசங்களில் தொடர்ச்சியாக முகில்கள் காணப்படுவதும் மலைகளினால் உருவாகும் நிழலுமாகும். நேரடியான சாதாரண கதிர்வீச்சேற்றத்தின்(DNI) தீவிரத்தன்மை வேறுபாடு உலகளாவிய கிடையான கதிர்வீச்சேற்றத்திற்குச் (GHI) சமமானதாகும்.
இலங்கையின் சூரிய வள வரைபடம் இலங்கையின் சூரிய வளங்கள் பற்றிய தற்போதைய அறிவிற்கு ஒரு முக்கியமான சேர்க்கையாகும். இலங்கையின் முதலாவது சூரிய வள வரைபடம் 2005 ஆம் ஆண்டிலே அமெரிக்காவின் தேசிய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி ஆய்வுகூடத்தினால் (NREL) இலங்கை மற்றும் மாலைதீவின் காற்று மற்றும் சூரிய வள வரைபடமாகத் தயாரிக்கப்பட்டது. நாட்டின் சூரிய வளத்தினை ஆராய்வதற்கான இவ்வாறான முயற்சிகள் சூரிய சக்தி பற்றிய மொத்த மதிப்பீடுகளை வழங்கியுள்ளது. எவ்வாறாயினும் சாத்தியமுள்ள சூரிய சக்திப் பிரயோகங்கள் பற்றிய அறிவார்ந்த தீர்மானங்களை எடுப்பதற்குத் தேவையான துல்லியத்தினையும் வடிவமைப்பினையும் காலம் மற்றும் இடம் சார்ந்த தரவுகள் கொண்டிருக்கவில்லை. எனவே இலங்கையில் சூரிய வளங்களின் நிலைபெறுதகு உருவாக்கத்திற்கு இன்றியமையாததாக துல்லியமான சூரிய வள வடிவமைப்புக் கருதப்பட்டது. இலங்கையின் சூரிய வள வரைபடம் இத்தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்குத் தொகுக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தேறிய மீற்றர் பொருத்தப்பட்ட திட்டமானது நாடு முழுவதும் பாரிய அளவு அமுல்படுத்தலுடன் கூரை மேல் பொருத்தப்படும் சூரியக் கலத் திட்டத்திற்குப் பங்களிப்பு வழங்கி வருகின்றது.
“சூரிய சக்திக்கான போராட்டம்” என அறியப்படும் “சூரிய பல சங்ராமய” எனும் தொனிப்பொருளின் கீழ் கூரை மேல் பொருத்தப்படும் சூரியக் கலப் பொருத்துகையின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தினை 2016 செப்டெம்பர் 06 ஆம் திகதி அரசாங்கம் ஆரம்பித்து வைத்தது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேசிய வலையமைப்பிற்கு அனுப்பிவைக்கப்படும் மேலதிக சக்தி ஒன்றில் முன்கொண்டு வரப்படலாம் (தேறிய மீற்றர் திட்டத்தி்ல் மேற்கொள்ளப்பட்டது போல்) அல்லது முதலாவது 7 வருடங்களின் போது கிலோவற்றிற்கு 22 ரூபா என்ற அடிப்படையிலும் எஞ்சிய 13 வருடங்களுக்கு கிலோவற்றிற்கு 15 ரூபா என்ற அடிப்படையிலும் காசாக்கப்படலாம் (இத்திட்டம் தேறிய கணக்கீடு என அடையாளம் காணப்படுவது). இந்த நிகழ்ச்சித்திட்டமானது சிற்றின மின்சக்தி உற்பத்தியாளர்களின் திட்டம் என அறியப்படும் ஒரு மூன்றாவது திட்டத்தின் மூலம் நிறுவன ரீதியான பாவனையாளர்களை ஊக்குவிக்க முயற்சிக்கின்றது. இதன்போது மின்சாரப் பாவனையாளர்களின் மீற்றர் பாவனை முறைக்கு எவ்வித மாற்றத்தினையும் மேற்கொள்ளாது சகல மின் பிறப்பாக்கமும் வேறு ஒரு ஏற்றுமதி மீற்றர் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
சூரியக் கல ஆக்கக்கூறுகளின் செலவில் பாரிய குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சூரியக் கல முறைமைகளுக்கான சிறந்த கூரைகளைக் கொண்டுள்ள பாரிய கைத்தொழிற்துறை வாடிக்கையாளர்களை அணுகுவதற்குச் சேவை வழங்குனர்கள் துரிதமாக நகர்ந்துள்ளனர்.