எம்மைப் பற்றி




ஐந்து ஆண்டு காலப் பகுதியினுள் தேசிய க்றிட் மின்சார முறைமைக்கு 500 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய மின்னுற்பத்திப் பொறித்தொகுதிகளின் சேர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்திக் கேள்வி சார் முகாமைத்துவ செயற்பாடுகளை நாட்டில் தாபிப்பதைத் துரிதப்படுத்தும் பொருட்டு சக்திக் கேள்வி சார் முகாமைத்துவம் பற்றிய ஜனாதிபதி சிறப்புச்செயலணி தாபிக்கப்பட்டது. இது மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சின் செயலாளரினால் கூட்டப்படக்கூடிய, மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சு தலைமை வகிக்கும் அமைச்சுகளுக்கு இடையிலான ஒரு சிறப்புச்செயலணியாகும்.

அமைச்சுகளுக்கு இடையிலான இந்த சிறப்புச்செயலணியினது வழிகாட்டலின் போில், தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்திப் பிரதி அமைச்சர் தலைமை வகிக்கும் ஒரு தேசிய நெறிப்படுத்தல் குழு தாபிக்கப்பட்டுள்ளது. மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் தலைவர்கள், ஜனாதிபதி சிறப்புச்செயலணியிலுள்ள ஏனைய அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவு ஜனாதிபதி சிறப்புச்செயலணியின் இயக்கச்செயற்பாட்டு அங்கமாகும். இந்தப் பிரிவு இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையினதும், இலங்கை மின்சார சபையினதும் வரையறுக்கப்பட்ட இலங்கை தனியார் மின்சார நிறுவனத்தினதும் பொறியியலாளர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் இந்தப் பிரிவுக்கு இணக்கப்பட்டுள்ளனர். சக்தி முகாமைத்துவம் தொடர்பான ஒன்பது பாரிய சக்திப் பிரிவுகளையும் வலுப்படுத்துவதற்கு மேலதிகமாக, அந்த மூன்று நிறுவனங்களினதும் சக்திக் கேள்வி சார் முகாமைத்துவ செயற்பாடுகள் இந்தப் பிரிவினூடாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.